ஜெயங்கொண்டம், டிச. 18: அரியலூர் மாவட்டம் தளவாய் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன் தனது உறவினரை அழைத்து கொண்டு, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தபோது, தளவாய் கடைத்தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து தளவாய் காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன், அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது உறவினர், அவரது பெற்றோர்கள், இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் ஆகிய 5 நபர்கள் மீது தளவாய் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறையினர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வாகனம் ஓட்டும் வயதுக்குக் குறைவானவர்கள், வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். குற்றத்துக்கு துணை போகாமல், பெற்றோர்கள் தடுக்க வேண்டும். இந்திய சட்டங்களின்படி, 18 வயதுக்குக் குறைவானவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற தகுதியற்றவர்கள். மீறி வாகனம் ஓட்டினால், சிறார் நீதிச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில், பெற்றோர்கள், வாகனத்தின் உரிமையாளர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க நேரிடும். இவ்வாறு அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
