மழைநீரை அகற்றக் கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் மறியல்

தூத்துக்குடி, ஜன. 20:மழைநீரை அகற்றக் கோரி தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் ஏற்கனவே பெய்த மழையால் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த நிலையில் கடந்த வாரம் 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 2500க்கும் மேற்பட்ட வீடுகள் தீவுகளாக மாறியுள்ளன. 250க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை காலி செய்துள்ளனர்.

இந்நிலையில் வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. இதனை கண்டித்தும் தங்கள் பகுதியில் உள்ள மழை நீரை அகற்றகோரியும் நேற்று 3ம் மைல் பகுதியில் கதிர்வேல்நகர், தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தாசில்தார் ஜஸ்டின், டவுன் டிஎஸ்பி கணேஷ், விஏஓ பாத்திமாராணி, எஸ்ஐகள் வேல்ராஜ், ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திடீர் மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: