நெல்லையில் சாலை பாதுகாப்பு பூங்கா அமைக்கப்படும் துணைகமிஷனர் தகவல்

நெல்லை, ஜன.20: நெல்லையில் போக்குவரத்து விதிகளை மக்களுக்கு விளக்கும் வகையில் சாலை பாதுகாப்பு பூங்கா அமைக்கப்படும் என மாநகர போலீஸ் துணைகமிஷனர் மகேஷ்குமார் தெரிவித்தார். சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி நேற்று வண்ணார்பேட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ நெல்லை மாநகரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி காமிராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இக்காமிராக்கள் மூலம் கொலை, கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன. சாலை விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களை கண்டறிந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

காமிராக்கள் மூலம் சாலை விதிமுறைகளை மீறுவோரையும் கண்டறிய முடிகிறது. மாநகர் பகுதியில் தொடர்ச்சியாக சிசிடிவி காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாநகரில் சாலை போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு, பாதுகாப்பு முறைகளை விளக்கும் வகையில் சாலை பாதுகாப்பு பூங்கா அமைக்கப்படும்.’’ என்றார். இந்நிகழ்ச்சியில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், ஆய்வாளர் பர்வீன் பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: