திண்டுக்கல், டிச.17: திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்க கோரி உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் கடந்த 1ம் தேதி முதல் இஃபைலிங் முறையை நடைமுறைபடுத்தியதை நிறுத்திவைக்க வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்புசட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கறிஞர்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து வழக்கறிஞர்கள், வட்டாட்சியர் அலுவலக சாலை வழியாக தலைமை தபால் நிலையம் வந்தனர். அங்கு இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்க கோரி உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் குமரேசன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் காயத்ரி தேவி, இணைச் செயலாளர் ஹரிஹரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
