மகாராஷ்டிரா துணை முதல்வராக புதிய பொறுப்புகளுடன் கடினப் பயணத்தை தொடங்கும் சுனேத்ரா: தனிப்பட்ட அரசியல் அடையாளத்தை உருவாக்குவாரா? அரசியல் வட்டாரங்கள் கேள்வி

சென்னை: மகாராஷ்டிரா துணை முதல்வராக புதிய பொறுப்புகளுடன் கடினப் பயணத்தை தொடங்கியுள்ளார் சுனேத்ரா பவார். கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் தனிப்பட்ட அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டிய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார் மறைந்த மூன்று நாட்களுக்குள், அவரது மனைவி சுனேத்ரா பவார் மாநிலத்தின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அஜித் பவார் உயிருடன் இருந்தபோது வகித்த மூன்று முக்கிய அரசியல் பதவிகளில் தற்போது இரண்டு பதவிகளை கட்சி நிரப்பியுள்ளது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவி குறித்து இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை. அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக ஆறு முறை பதவி வகித்த அனுபவமிக்க அரசியல்வாதியாக இருந்தார். அவருடன் ஒப்பிடுகையில், சுனேத்ரா பவார் அரசியலில் புதுமுகம் என்பதும், நிர்வாக அனுபவம் குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பதம்சிங் பாஜிராவ் பாட்டீலின் மகளான சுனேத்ரா பலமான அரசியல் குடும்பத்தை சார்ந்தவர் என்றாலும், பின்னணியில் இருந்து சேவை செய்வதையே விரும்பினார்.

2024 மக்களவைத் தேர்தலில்தான் அவர் முதல் முறையாக தேர்தல் அரசியலில் கலளமிறங்கினார். பாராமதி தொகுதியில், தனது உறவினரான சுப்ரியா சுலேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனாலும் அதே ஆண்டில் அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, ஒரே வாரத்தில் ராஜ்யசபா உறுப்பினரிலிருந்து துணை முதல்வர் பதவிக்கு உயர்ந்துள்ளார். நேரடி தேர்தல் அரசியலில் நீண்ட அனுபவம் இல்லாவிட்டாலும், அவரது சமூக அனுபவமும் அரசியல் புரிதலும் அவரை இந்த பொறுப்புக்கு தகுதியானவராக மாற்றியுள்ளன. பதவியேற்பு விழாவில் எழுந்த “அஜித் தாதா அமர் ரஹே” என்ற கோஷங்கள், அஜித் பவார் கட்சித் தொண்டர்களிடையே பெற்றிருந்த செல்வாக்கை வெளிப்படுத்தின. அதே நேரத்தில், கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் சுனேத்ரா பவார் தனிப்பட்ட அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டிய தேவையும் தற்போது எழுந்துள்ளது.

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளும் ஒன்றிணைவதற்கான முயற்சிகள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், சுனேத்ரா பவாரின் பதவி உயர்வு தொடர்பாக தன்னிடம் ஆலோசனை செய்யப்படவில்லை என கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் திருப்பு முனையாக அமைந்துள்ளது. மேலும், அவரது மகள் சுப்ரியா சுலே, பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் டெல்லி சென்றதும், பவார் குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நீடிப்பதை சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதிலிருந்து, பதவி உயர்வை பெற்றுள்ள சுனேத்ரா பவார், நிர்வாகப் பொறுப்புகள், கட்சி ஒற்றுமை மற்றும் குடும்ப அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட பல சவால்களுக்கிடையே தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும், கணவரின் மறைவால் ஏற்பட்ட துயரத்தை எதிர்கொண்டுள்ள சூழலிலேயே, மாநில அரசின் முக்கிய நிர்வாகப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது சுனேத்ரா பவாருக்கு மிகவும் சவாலாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: