சிறுமுகை லிங்காபுரம் – காந்தவயல் இடையே தண்ணீரில் மூழ்கிய உயர்மட்ட மேம்பாலம்

*பரிசலில் மக்கள் அபாய பயணம்

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம், சிறுமுகை லிங்காபுரத்தை அடுத்து காந்தவயல், காந்தையூர், மேலூர், உளியூர், ஆலூர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

மேலும், லிங்காபுரம் – காந்தவயல் இடையே காந்தையாறு என்னும் காட்டாறு கடந்து செல்கிறது. நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் இந்த காந்தையாற்றின் வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் லிங்காபுரம் – காந்தவயல் இடையே கடந்த 2004 ஆம் ஆண்டு காந்தையாற்றின் குறுக்கே பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது.

ஆற்றின் கீழ் மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்திற்கு பாலம் கட்டப்பட்ட போதே பாலத்தின் உயரத்தை குறைந்தபட்சம் 32 அடியாக உயர்த்தி கட்டினால் தான் வெள்ளப்பெருக்கு காலத்தில் பாலம் நீரில் மூழ்காது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால், ஏற்கனவே திட்டமிட்டபடி 20 அடி உயரத்தில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

அன்று முதல் தொடர்ந்து மழைக்காலங்களில் ஆண்டின் பாதி மாதங்கள் பாலம் தண்ணீரில் மூழ்கிய படியும், தொடர்ந்து நீர் வரத்து குறைந்ததும் பாலம் வெளிவருவதுமாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு லிங்காபுரம் – காந்தவயல் இடையே உள்ள பழைய பாலத்தின் அருகிலேயே ரூ.15.40 கோடி மதிப்பீட்டில் பவானி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டும் பணிகள், கடந்த 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கி நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் ஏறத்தாழ 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாகவே காந்தையாற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து வருவதால் பணிகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் காந்தவயல், காந்தையூர், ஆலூர், மேலூர், உளியூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவர்கள், பணி நிமித்தமாக மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வோர், மருத்துவ தேவைகளுக்காக கோவை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்ய வேண்டிய கட்டாய சூழல் இருந்து வருகிறது. எனவே, மழைக்காலம் முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் இந்த உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: