பழநி, டிச. 16: தனுர் மாதம் துவங்குவதையொட்டி இன்று முதல் பழநி கோயில்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு நடைபெற உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் மலைக்கோயில், உபகோயில்களான திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயணபெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் வரும் இன்று (செவ்வாய்) முதல் ஜனவரி மாதம் 14ம் தேதி வரை மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெறும். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும், கோயிலின் உபகோயில்களிலும் திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். 14ம் தேதி தனுர் மாத பூஜை பூர்த்தி நடைபெறும். கோயிலின் உபகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம் மற்றும் நடராஜர் அபிஷேக நடைபெறுமென கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
