ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி

புதுச்சேரி, டிச. 16: புதுச்சேரி வில்லியனூர் அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவருக்கு புதுவை கோவிந்த சாலையை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ராஜ்குமார், தனக்கு ஜிப்மரில் முக்கிய அதிகாரியை தெரியும், அவர் மூலமாக ஜிப்மரில் செவிலியர் வேலை வாங்கித்தர முடியும் என கூறினாராம். இதனை நம்பி முரளிதரன், அவரது மகளுக்கு செவிலியர் வேலை வாங்கித்தரக்கோரி பணம் கொடுத்ததாக தெரிகிறது. இதேபோல், இன்னும் சிலரிடமும் ராஜ்குமார் ரூ.40 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், ராஜ்குமார் வேலை வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் பணத்தை அளித்தவர்கள் திருப்பித்தரும்படி ராஜ்குமாருக்கு நெருக்கடி அளித்தனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து முரளிதரன் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ராஜ்குமார் மீது வழக்குபதிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், ஜிப்மரில் பதிவாளராக இருந்த மகேஷிடம் பணத்தை அளித்ததாகவும், அவர் வேலை பெற்றுத்தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது, புதுவை பல்கலைக்கழக துணை பதிவாளரான மகேஷ், டெபுடேஷன் அடிப்படையில் ஜிப்மரில் பணியாற்றிய போது பணத்தை பெற்றதாகவும் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஒதியஞ்சாலை போலீசார், இவ்வழக்கை புதுவை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றினர். இதனிடையே மகேஷ் கடந்த 4ம் தேதி முதல் நீண்ட விடுப்பு எடுத்து தலைமறைவாகி விட்டார். அவரை புதுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது பெங்களூரில் மகேஷ் பதுங்கியிருப்பதாகவும் அவரை பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.

Related Stories: