*தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
உடன்குடி : உடன்குடி, திருச்செந்தூர் சாலைகளில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக மாடுகளை தொழுவத்தில் கட்டாமல் அவிழ்த்து விடுவது, வீட்டில் நாய் போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கூட வீட்டின் உட்புறத்தில் வளர்க்காமல் வெளியில் விடுவது என அலட்சியமாக செயல்படுவது வேதனைக்குரியது.
உடன்குடி, திருச்செந்தூர், பரமன்குறிச்சி பகுதிகளில் கால்நடைகளால் விபத்துகள் பெருகி வருகின்றன. மெஞ்ஞானபுரத்தில் இருந்து உடன்குடி செல்லும் சாலை, உடன்குடியில் இருந்து பரமன்குறிச்சி, தாண்டவன்காடு, திசையன்விளை, குலசேகரன்பட்டினம், பரமன்குறிச்சியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் தற்போது கால்நடைகள் அதிகளவில் உலா வருகின்றன.
பெரும்பாலான நேரங்களில் கால்நடைகள் சாலைகளிலேயே படுத்துக் கொள்கின்றன. பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் முடிந்தவரையில் ஒதுங்கி செல்கின்றனர். கனரக வாகனங்களாக இருந்தால் அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்தால் கூட அவைகள் எழும்பாத நிலையில் வாகன ஓட்டுநர்கள் இறங்கி வந்து அதை விரட்டி விட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் அனைத்து கால்நடைகளும் கூட்டமாக சேர்ந்து சாலைகளில் படுத்துகொள்கின்றன.
சாலையில் வளைவுகளில் கால்நடைகள் படுத்திருக்கும் போது இருசக்கர வாகன ஓட்டிகள், கன, இலகு ரக வாகனங்கள் பிரேக் போட முடியாமல் விபத்தில் சிக்கி கொள்கின்றன. இதுபோன்ற விபத்துகளால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு படுகாயங்கள் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
