வருசநாடு, டிச. 12: ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலை மயிலை ஒன்றியங்களில் நூற்றுக்கணக்கான மலை கிராமங்கள் உள்ளது. இந்தப் பகுதிகளில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் வனத்துறையின் கெடுபிடிகள் தடைபட்டு நிற்கிறது. குறிப்பாக வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான சுமார் 10 கிலோமீட்டர் சாலையில் இடையிடையே நான்கு இடங்களில் வனத்துறையினர் தடை விதித்ததால் சாலை பணி முழுமை அடையாமல் உள்ளது. இதன் காரணமாக வனத்துறை தடை விதித்த பகுதிகளில் சாலை இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் போன அளவிற்கு சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையின் வழியாக 10க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் தினமும் அபாயகரமான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் வனத்துறையால் தடைபட்டு நிற்கும் சாலை உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கிடப்பில் போடப்பட்டுள்ள மயிலாடும்பாறை அருகே நரியூத்து முதல் மூலக்கடை கிராமம் வரை உள்ள கிராம சாலைகளை விரைவில் தார்சாலையாக அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன் சுவர் விளம்பரம் செய்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதே நிலை நீடித்தால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் ஆதார் அட்டை கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாகவும் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
