சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவர்கள் சாகசம் செய்வதாக நினைத்து அரசு பேருந்துகளின் படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். ஓட்டுநர், நடத்துனர் கண்டித்தால் அவர்களை தாக்குகின்றனர். ஓட்டுநர் சாலையை கவனித்து பேருந்து ஓட்டுவதில் கவனம் செலுத்துவார். நடத்துனர் பயணிகளுக்கு குறிப்பிட்ட கட்டண நிலைக்குள் பயணச்சீட்டு வழங்கி அவரது பணியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
படிக்கட்டில் பயணம் செய்வது சட்டவிரோதம் என தெரிந்தும் வேண்டுமென்றே பயணம் செய்வோரை தடுப்பதற்காகத்தான் படிக்கட்டு கதவுகள் உள்ளன. அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதியை ஏற்படுத்திட வேண்டும். ஓட்டுநர், நடத்துனர் மட்டுமே படிக்கட்டு பயணத்திற்கு பொறுப்பு என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
