வாக்காளர் பட்டியலில் முறைகேடு புகாரால் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்: ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி:வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று காரசாரமான விவாதம் தொடங்கியது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய கடந்த 1ம் தேதி முதலே, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. ‘நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இரட்டை வாக்கு பதிவுகள் மற்றும் தவறான தரவுகளைச் சரிசெய்யவே இந்தத் தீவிரத் திருத்தப் பணி நடக்கிறது’ என்று ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் திட்டவட்டமாகக் கூறின.

தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடாமல், சட்டரீதியான சீர்திருத்தங்கள் குறித்து மட்டுமே நாடாளுமன்றம் விவாதிக்க முடியும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், தற்போது இரு அவைகளிலும் மொத்தம் 10 மணி நேரம் விவாதம் நடத்த ஒன்றிய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இன்று அவை நடவடிக்கைகள் சுமூகமாகத் தொடங்கின. முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் விவாதத்தைத் தொடங்கி வைத்த காங்கிரஸ் மூத்த எம்பி மனீஷ்திவாரி, எஸ்ஐஆர் நடைமுறையில் உள்ள குளறுபடிகள் குறித்துக் காட்டமாகப் பேசினார். ‘வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாகவும், இது ஜனநாயகத்திற்கு விரோதமானது’ என்றும் அவர் அடுக்கடுக்கான புகார்களை அவையில் முன்வைத்தார். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்கு, விவாதத்தின் இறுதியில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளித்தார். தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியானது, கடந்த இருபது ஆண்டுகளாகத் தேங்கியுள்ள பிழைகளைச் சரி செய்யவும், இடம் மாறிய மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் மேற்கொள்ளப்படும் அவசியமான நடவடிக்கை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது.

ஆனால், இந்த கணக்கெடுப்பானது குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை நீக்குவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்படும் சதி என்றும், இதில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு அதிக பணிச்சுமை கொடுக்கப்படுவதாகவும், மன உளைச்சல் காரணமாக அலுவலர்கள் உயிரிழப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் பாஜக சார்பில் எம்பிக்கள் நிஷிகாந்த் துபே, பி.பி.சவுத்ரி, அபிஜித் கங்கோபாத்யாய், சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் கே.சி.வேணுகோபால், மனீஷ் திவாரி, ஜோதிமணி உள்ளிட்ட பலரும் விவாதிக்கின்றனர். இதற்கிடையில், மாநிலங்களவையில் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழா குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக, நேற்று இவ்விவாதத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு இடையிலும் வந்தே மாதரம் பாறை போல உறுதியாக நின்று ஒற்றுமையை விதைத்தது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: