கடற்கரை பகுதிகளில் தடை குமரியில் களை இழந்த காணும் ெபாங்கல் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின

நாகர்கோவில், ஜன.17 : சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால், காணும் பொங்கலையொட்டி குமரி மாவட்ட கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 14ம் தேதியும், நேற்று முன் தினம் (15ம் தேதி) மாட்டு பொங்கல் விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று (16ம் தேதி) காணும் பொங்கல் ஆகும். காணும் பொங்கலையொட்டி வழக்கமாக சுற்றுலா தலங்களில் அதிகளவில் பொதுமக்கள் திரள்வார்கள்.  ஆனால் 2ம் கட்ட கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் 15.1.2021 முதல் 17.1.2021 வரை மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என கலெக்டர் அரவிந்த் கூறி இருந்தார்.

அதன்படி நேற்று முன் தினம் மாட்டு பொங்கல் அன்றே சுற்றுலா தலங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. முக்கடல் திரிவேணி சங்கம கடற்கரை பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் அருகில் நின்று கடல் அழகை ரசிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று காணும் பொங்கலையொட்டி 2 வது நாளாக சுற்றுலா தலங்களில் போலீசார் கண்காணித்தனர். கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட வில்லை. படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. முக்கடல் சங்கம பகுதியில் அனுமதி இல்லாததால், கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன. நாகர்கோவில் அடுத்த சங்குதுறை, சொத்தவிளை கடற்கரை பகுதிகளில் போலீசார் கண்காணித்தனர். போலீஸ் தடை பற்றி தெரியாமல் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொட்டிப்பாலம், திற்பரப்பு போன்ற சுற்றுலா தலங்களில் மக்கள் அனுமதிக்கப்பட வில்லை. இன்று (17ம்தேதி) வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். வழக்கமாக காணும் பொங்கல் நாளில், குடும்பத்துடன் சுற்றுலா தலங்களில் மக்கள் திரள்வார்கள். இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டி இருக்கும். ஆனால் சுற்றுலா தலங்கள் களை இழந்த நிலையில் இருந்தன.

Related Stories:

>