பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் மீண்டும் முளைக்கும் நெல் மணிகள் கல்லல் விவசாயிகள் கவலை

காரைக்குடி, ஜன.13: காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் தொடர் மழை காரணமாக 1000 ஏக்கருக்கு மேல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி மீண்டும் முளைத்துள்ளன. காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியத்தில் 4023 எக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் 20 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சுமார்  1000 ஏக்கருக்கு மேல் பயிர்கள் கதிருடன் அப்படியே தண்ணீரில் சாய்ந்து விட்டது. பல இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி மீண்டும் முளைத்து வருகின்றன. இதனால் ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

விவசாயிகள் கூறுகையில், அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தண்ணீரில் சாய்ந்த பயிர்களை மட்டும் கணக்கெடுக்கின்றனர். ஆனால் சாயாமல் நிற்கும் பயிர்களும் தொடர்ந்து தண்ணீரில் இருப்பதால் முளைத்து விடும். இந்த பயிர்களும் பயன் இல்லை. எனவே இதனையும் சேர்த்து கணக்கெடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். கடந்த ஆண்டுகளில் வறட்சியால் பாதிப்பு வந்த நிலையில் தற்போது மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உழவு கூலி, உரம், பூச்சி மருந்து, களை எடுத்தல் உள்பட பல்வேறு வகையில் ஏக்கருக்கு 20 ஆயிரத்துக்கு மேல் நஷ்டம் வர வாய்ப்புள்ளது. தற்போது பெய்த மழையால் கண்மாய்கள் நிறைந்துள்ள நிலையில் கோடை விவசாயமாவது கைகொடுக்குமா என தெரியவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க  வேண்டும் என்றனர்.

வேளாண் உதவி இயக்குநர் அழகுராஜா கூறுகையில், விவசாயதுறை மற்றும் வருவாய் துறையினருடன் இணைந்து கணக்கெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

>