நீர், நிலைகளின் கரைகளை பலப்படுத்த பனை விதை நடவு அவசியம்

*பேராசிரியர் அறிவுறுத்தல்

சீர்காழி : நீர், நிலைகளின் கரைகளை பலப்படுத்தும் விதமாக அருகில் வசிப்பவர்கள் ஏராளமான பனை விதைகளை நடவு செய்ய வேண்டும் என்று பேராசிரியர் ரவீந்திரன் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாறு கரையில் தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, பூம்புகார் பனை அறக்கட்டளை இணைந்து 3,000 பனை விதை நடவு செய்யப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாகப் பனையின் முக்கியத்துவம் அறிந்து தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்போடு, பனை விதை நடவு நடந்து வருகிறது.

இந்த ஆண்டும் தமிழக அரசின் பல்வேறு துறைகள், பனை விதை நடவு செய்யப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை – பூம்புகார் பனை அறக்கட்டளை இணைந்து, பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ், உப்பனாற்றங்கரையின் வடக்கு கரையில் 3,000 மேற்பட்ட பனை விதைகள், கரையில் மண்ணரிப்பைத் தடுத்து, கரையைப் பலப்படுத்தும் விதமாக நடவு செய்யப்பட்டன.

இதுகுறித்து பூம்புகார் பனை அறக்கட்டளையின் நிர்வாகி பேராசிரியர் ரவீந்திரன் கூறுகையில், இது போன்ற ஆற்றின் கரைகளைப் பலப்படுத்துவது, கரைகளின் அருகில் வசிப்போரின் முதல் கடமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்தக் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுபவர் அவர்களே. ஆகையால், வாய்க்கால், ஆறுகள் மற்றும் ஏரியின் அருகில் வசிப்பவர்கள், அந்தந்தக் கரைகளைப் பலப்படுத்தும் விதமாகப் பனை விதைகளை நடவு செய்ய வேண்டும்.

மேலும், பனை விதை நடவு தொடர்பாக, உங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால், பூம்புகார் பனை அறக்கட்டளையை அணுகலாம் என்றார். மேலும், பனை விதை நடவின் அவசியம் பற்றி ஆசிரியர் சேரலாதன் கூறுகையில், அன்று தமிழர்களின் வரலாற்றை, தனது ஓலைகளில் பாதுகாத்துத் தந்த பனையை, இன்று நாம் அதிக அளவு நடவு செய்து பாதுகாத்தால், எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில், சீர்காழி தோட்டக்கலைத் துறை அலுவலர் தீபன் சக்கரவர்த்தி, உதவி அலுவலர் குமரவேல், பூம்புகார் பனை அறக்கட்டளை நிர்வாகிகள், சிவசுப்பிரமணியன், ஆசிரியர் சேரலாதன், பிரியா ரவீந்திரன், ஆசிரியை இலக்கியா, தர்ஷன் ஆகியோர் பங்கு பெற்றனர். இந்தப் பனை விதை நடும் நிகழ்ச்சியை சீர்காழி வட்ட ,தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறையும், பூம்புகார் பனை அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

Related Stories: