திசையன்விளை, டிச. 8:திசையன்விளை செல்வமருதூர் பெரியம்மன் கோவிலில் காலை பக்தர்கள் தரிசனத்திற்காக கோவிலை அர்ச்சகர் திறந்து வைத்தார். பின்னர் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு அர்ச்சகர் சென்றுவிட்டு மீண்டும் பெரியம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது முத்தாரம்மன், மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் சிலைகளில் உள்ள தங்கத்தாலி திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அர்ச்சகர் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார். பின்னர் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பட்டப்பகலில் அம்மன் சிலைகளில் தாலி திருட்டு போன சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் திசையன்விளை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
