திண்டுக்கல், மார்ச் 10: திண்டுக்கல் கூட்டுறவு நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில், பரிவார தெய்வமான செல்வ ஸ்ரீவாராகி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதம் தேய்பிறை பஞ்சமி தினத்தில் சிறப்பு யாக வேள்வி நடைபெறும். அதன்படி நேற்று முன் தினம் மாலை மாசி மாத தேய்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரக சாந்தி மற்றும் பஞ்சகச்ச பாராயணத்தால் யாக வேள்வி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், நெய், மஞ்சள், சந்தனம், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாற்றினர். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதமாக கிழங்கு வகைகள் வழங்கப்பட்டது.
