ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி துவங்கியது

ஊட்டி, ஜன. 13: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில்  சங்க இலக்கியங்களில் குறிஞ்சி திணையின் சிறப்பியல்புகள் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நேற்று துவங்கியது. ஊட்டி அரசு கலை கல்லூாி அருகேயுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கல் பங்களாவில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி வாழ் பழங்குடியின மக்களின் வீடுகளின் மாதிரி மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியத்தை உணர்த்தும் அரிய வகை புகைப்படங்கள், ஒவியங்கள், பழங்காலத்து சிலைகள் பழங்கால நாணயங்கள், இசைக்கருவிகள், வன விலங்குகள், பறவைகளின் பதப்படுத்தப்பட்ட மாதிாிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஓலை சுவடிகள், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேகாிக்கபப்பட்ட 60க்கும் மேற்பட்ட கனிமங்கள், புதைப்படிவங்கள், கல்மரம் போன்றவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் சங்க இலக்கியங்களில் குறிஞ்சி திணையின் சிறப்பியல்புகள் என்ற தலைப்பில் புகைப்படம் மற்றும் ஆவண கண்காட்சி  நேற்று துவங்கியது.

இதனை ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எபினேசர் துவக்கி வைத்தார். கண்காட்சியில் குறிஞ்சி திணையின் கடவுள் முருகன், மக்கள், குறிஞ்சி திணை சார்ந்த நிலத்தில் வாழும் புலி, யானை, மயில், கிளி, நீர்நிலைகளான அருவி, சுனை,  மரங்களான வேங்கை, குறிஞ்சி, தேக்கு, அகில், பலா மரங்கள் படங்கள், குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களின் தொழில் உள்ளிட்டவைகளை தெரிவிக்கும் வகையிலான படங்கள், அது தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஊட்டி அரசு கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர். ஊட்டி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் கூறுகையில், பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் பார்த்து குறிஞ்சி திணை சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் குறிஞ்சி திணையின் சிறப்பியல்புகள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பயிலும் போது எழுத்து வடிவில் தான் குறிஞ்சி திணை குறித்து படித்திருப்போம். அதனை காட்சி வடிவில் விளக்கும் பொருட்டு அது தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி வரும் 29ம் தேதி வரை நடக்கிறது, என்றார்.

Related Stories:

>