பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாள்

திருவாரூர், ஜன.13: தொழிலாளர் நல உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு அரசு அறிவித்தவாறு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர், கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்டவர்களுக்கு திருவாரூர் கஸ்தூரிபாகாந்தி பள்ளியிலும், மன்னார்குடி, நீடாமங்கலம் தாலுகாவிற்கு மன்னார்குடியில் தூயவளனார் பெண்கள் பள்ளியிலும், திருத்துறைப்பூண்டி தாலுகாவிற்கு திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும், நன்னிலம், வலங்கைமான் மற்றும் குடவாசல் தாலுகாவிற்கு நன்னிலம் அரசு ஆண்கள் பள்ளியிலும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது கடந்த 10ம்தேதி முதல் நடந்து வருகிறது.

இதில் பச்சை அரிசி 2 கிலோ, பாசிபருப்பு ஒரு கிலோ, சமையல் எண்ணெய் அரை லிட்டர், வெல்லம் ஒரு கிலோ, நெய் 100 கிராம், முந்திரி, திராட்சை தலா 25 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் வேட்டி, புடவை ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையொட்டி இந்த பொருட்கள் வழங்குவதற்கு இன்று (13ம்தேதி) கடைசி நாள் என்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்குள் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட பொருள் வழங்கும் இடத்தில் தங்களது பதிவு அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல், ஓய்வூதியதாரர்கள் இருப்பின் ஓய்வூதிய அசல் ஆணை ஆகியவற்றுடன் சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர்  அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>