அத்திமரப்பட்டி-முள்ளக்காடு சாலையில் திறந்து கிடந்த குடிநீர் வால்வு தொட்டி மூடல்

ஸ்பிக்நகர், ஜன.12: தூத்துக்குடி அத்திமரப்பட்டியில் இருந்து முள்ளக்காடு செல்லும் சாலையில் திறந்து கிடந்த குடிநீர் வால்வு தொட்டி தினகரன் செய்தி எதிரொலியால் மூடப்பட்டது.தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக வல்லநாடு, வாழவல்லான் பகுதிகளிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரை ஆத்தூர், ஆறுமுகமங்கலம் உள்ளிட்ட பகுதி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு நீண்ட தூரம் தண்ணீர் கொண்டு செல்லும் போது குழாய்களில் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே ஜம்ப் தொட்டிகள்அமைத்து வால்வுகளின் மூலமாக காற்று வெளியேற்றப்படுகிறது. இந்த தொட்டிகள் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் அத்திமரப்பட்டி இருந்து முள்ளக்காடு செல்லும் சாலையில் வால்வு தொட்டிகள் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வால்வு தொட்டிகள் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனத்துக்கு வழிவிடும் போது தொட்டிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை இருந்தது.

எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன்பு, வால்வு தொட்டிக்கு மூடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 6ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மூடி போடப்பட்டது.

Related Stories: