மேற்குவங்கத்தில் 32,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் உத்தரவு ரத்து: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 32,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்த ஒற்றை பெஞ்ச் உத்தரவை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் நேற்று ரத்து செய்தது. மேற்கு வங்க தொடக்கப்பள்ளி வாரியத்தால் 2014 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு 2016ஆம் ஆண்டு 32 ஆயிரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ெகால்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா, மேற்குவங்க அரசின் 32 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மேற்குவங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கூடுதல் மதிப்பெண் பெற்ற 264 ஆசிரியர்கள் மற்றும் சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட 96 ஆசிரியர்களை தவிர மற்ற அனைவரையும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது. இருப்பினும் கொல்கத்தா தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு டிவிசன் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தபபிரதா சக்ரவர்த்தி மற்றும் ரீதபிரதா குமார் மித்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, 32 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை டிஸ்மிஸ் செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அனைத்து பணியமர்த்தல்களிலும் முறைகேடுகள் நிரூபிக்கப்படாததால் தனி நீதிபதி உத்தரவை ஏற்க விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், 9 ஆண்டுகளுக்குப் பிறகு பணிநீக்கம் செய்வது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories: