மும்பை: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத அளவாக நேற்று 90 ரூபாய்க்கு கீழ் சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபராக 2வது முறையாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, வரி விதிப்பு உள்ளிட்ட வர்த்தக ரீதியாக அவர் எடுத்த பதிலடி நடவடிக்கைகள் இந்திய ரூபாய் மதிப்பை வெகுவாக பாதித்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று முன்தினம் 43 காசு சரிந்து ரூ.89.94 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை வர்த்தகம் துவங்கியபோது ரூ.89.96 ஆக இருந்தது. வர்த்தக இடையில் ரூ.90.30 என்ற உச்சத்தை தொட்டது. முடிவில் முதல் முறையாக 90 ரூபாய்க்கு கீழ் சரிந்து, ரூ.90.21 ஆனது.
இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் நாணயத் துறை துணைத் தலைவர் மற்றும் ஆய்வாளர் ஜதீன் திரிவேதி கூறுகையில், ‘‘இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்படாததாலும், இதில் ஏற்பட்ட தாமதங்களாலும் ரூபாய் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. சாதனை அளவில் உயர்ந்த தங்கம் உள்ளிட்ட உலோகங்களின் விலை இறக்குமதிச் செலவை மேலும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் அமெரிக்கா விதித்த வரிகள் காரணமாக வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது’’, என்றார்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பங்கு வர்த்தகம், அந்நிய செலாவணி வர்த்தகம் பெரும் பாதிப்பை அடைகின்றன. இதையும் தாண்டி, அன்றாட வாழ்வில் மக்களிடம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. வெளிநாட்டு பயண செலவுகள் அதிகரிக்கும், கல்விக்கட்டணம் உயரும். இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதம் அளவுக்கு இறக்குமதியை சார்ந்திருக்கிறது. தற்போது ரஷ்யாவிடம் இருந்தும் எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டதால், இறக்குமதி செலவுகள் அதிகரித்து, கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும். இதுமட்டுமின்றி மின்னணுவியல், உரங்கள் மற்றும் சமையல் எண்ணெய் என இறக்குமதியை சார்ந்துள்ள பலவற்றின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.
வெளிநாட்டுக் கல்வி: வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள், குறிப்பாக வெளிநாடுகளில் தங்கி அமெரிக்க டாலரில் கல்விக் கட்டணம் செலுத்துபவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்குள். நேற்றைய ரூபாய் மதிப்பை வைத்து தோராயமாக கணக்கிடும்போது, 2023 உடன் ஒப்பிடுகையில், ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும்.
அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றம்: அமெரிக்காவுடனான சமீபத்திய வர்த்தக பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. மேலும் இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்த வரிகள் சில 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஏற்றுமதி இறக்குமதியாளர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வரும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.58.58 ஆக இருந்தது. பின்னர், கிடுகிடுவென சரிந்து தற்போது ரூ.90ஐ தாண்டியுள்ளது.
அதிபர் டிரம்ப் 2வது முறையாக ஆட்சிக்கு வரும்போது டாருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ₹84.40ஐ எட்டியது. இதையடுத்து கையிருப்பு டாலர்களை விற்கும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி இறங்கியது. டிரம்பின் 2வது ஆட்சிக் காலத்தில் ரூபாய் மதிப்பு மேலும் 8 முதல் 10 சதவீதம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பாரத ஸ்டேட் வங்கி கணிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த வீழ்ச்சியை ரூபாய் மதிப்பு இப்போதே அடைந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், காஸ் சிலிண்டர், எலெக்ட்ரானிக்
பொருட்கள் விலை அதிகரிக்கும் அபாயம்
* இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதமும், சமையல் எண்ணெயில் 60 சதவீதமும் இறக்குமதி செய்கிறது. ரூபாய் மதிப்பு சரிவால், இவற்றின் விலை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
* உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் லேப்டாப், பிரிட்ஜ், ஸ்மார்ட்போன் பாகங்கள் சில வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் இவற்றின் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
* இதுபோல் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்ந்தால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். ஏற்கெனவே ஒன்றிய பாஜ அரசு சந்தை விலையில் காஸ் விலையை அதிகரித்து விட்டது. 2014ம் ஆண்டு ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வரும்போது வீட்டு உபயோக சமையல் காஸ் விலை ரூ.414 ஆக இருந்தது. தற்போது இது 2 மடங்கிற்கு மேல் உயர்ந்து விட்டது.
வெளிநாட்டு கல்விக் கட்டணம் ரூ.5 லட்சம் அதிகரிக்கும்
வெளிநாட்டில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் ஆண்டுக்கு கல்விக் கட்டணமாக சராசரியாக 50,000 டாலர்கள் செலுத்த வேண்டி வரும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.80 ஆக இருந்தபோது இதன் மதிப்பு ரூ.40 லட்சம். தற்போது ரூ.45 லட்சம் செலுத்த வேண்டி வரும். இந்த ரூ.5 லட்சம் கட்டண உயர்வு, வெளிநாட்டு படிப்பு கனவில் உள்ள பல நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் சுமையாகும். இதுபோல், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.80 ஆக இருந்தபோது கல்விக்கடன் வாங்கியவர்கள், 12 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை அதிகம் செலுத்த வேண்டி வரும்.
யாருக்கு லாபம்?
*ஐடி நிறுவனங்கள், டாலரில் பரிவர்த்தனை செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம்.
* மருந்து ஏற்றுமதியாளர்கள் பலன் அடைந்தாலும், சர்வதேச சந்தை போட்டி மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதி தேவை காரணமாக சிக்கலை சந்திக்க நேரிடும்.
*அமெரிக்க வரியால் திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் பாதிப்பை சந்தித்துளள நிலையில், தற்போதைய வீழ்ச்சி நிலைமையை மேலும் மோசமாக்க வாய்ப்புகள் உள்ளன.
