180 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசம் நிவாரணம் கோரி கலெக்டரை விவசாயிகள் திடீர் முற்றுகை

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால் 180 ஏக்கர் நெற்பயிர்கள்  அழுகியது. இதற்கு நிவாரணம் கோரி கும்மிடிப்பூண்டி அடுத்த குருவாட்டுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் மற்றும்  அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நேற்று அழுகிய நெற்பயிருடன் கலெக்டரை முற்றுகையிட்டு நிவாரணம் கேட்டு முறையிட்டனர். இதைத்தொடர்ந்து திரளான விவசாயிகள் இது சம்பந்தமான புகார் மனுவை மாவட்ட கலெக்டர்  பொன்னையாவிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அடங்கிய  குருவாட்டுச்சேரி, வேற்காடு, நங்கபள்ளம், ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் விவசாயத்தையே நம்பி நாங்கள் வாழ்ந்து வருகிறோம். குருவாட்டுச்சேரியில் 100 ஏக்கர் மற்றும் வேற்காடு கிராமத்தில் 80 ஏக்கர் நெற்பயிர்கள் பயிரிட்டு இருந்தோம்.

அனுப்பநாயக்கன் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரானது பணப்பாக்கம் ஏரியை அடைந்து அதன் வழியாக ஏனாதி மேல்பாக்கம் ஏரி நிரம்பி குருவாட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. இந்த நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக இருந்தவையாகும். இதனால் விவசாயிகள் அனைவரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் இரண்டு கலங்கல் உள்ளது. இந்த இரண்டு கலங்கல் உயர்த்தி கட்டப்பட்டதால் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முற்றிலும் மழைகாலங்களில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதன் உயர் மட்டத்தை குறைத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும்.   எனவே, மழைநீரால் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததற்கு அரசின் மூலம் உரிய நிவாரணம் வழங்கவேண்டும், ஏனாதிமேல்பாக்கம் பகுதியில் கலங்கல் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: