நடுக்கடலில் மீனவர்கள் மோதல் விவகாரம்

மயிலாடுதுறை, ஜன.12: தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் தலைமையில் 19 மீனவ கிராம மக்கள் நேற்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களில், மீனவர்கள் சுருக்கு மடி வலையை பயன்படுத்தக்கூடாது, அதிவேக எஞ்சினை பயன்படுத்தக்கூடாது என்ற அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு மீன்பிடிப்பதில் மீனவர்களுக்குள் மோதல் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் கீழமூவர்க்கரை மீனவர்களுக்கும், பூம்புகார் மீனவர்களுக்கும் கடந்த மாதம் 12ம் தேதி கடலில் மீன்பிடிக்கும்போது மோதல் ஏற்பட்டது. இதில், இரண்டு தரப்பினரும் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதையடுத்து, கீழமூவர்க்கரை மீனவர்கள் தொழில் மறியல் செய்து ஒருமாதமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருக்கின்றனர். இப்பிரச்னை தொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் 5 முறை சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் பூம்புகார் பகுதி மீனவர்கள் அதில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரங்கம்பாடி கிராம பஞ்சாயத்தார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், கடந்த ஒருமாதகாலமாக கீழ மூவர்க்கரை மீனவர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர் இதுகுறித்து பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதுகுறித்து உரிய நடவடிகை எடுத்து அமைதியை நிலைநாட்டவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>