விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் வாடகை ஆடுகளை காட்டி பணம் வாங்கும் பயனாளிகள் நூதன முறையில் முறைகேடு நடப்பதாக புகார்

ஆண்டிபட்டி, ஜன. 12: தமிழகத்தில் அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு இலவசமாக ஆடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு கரூர், ஈரோடு பகுதி ஆட்டுச்சந்தையில் வைத்து, வியாபாரிகள் மூலம் ஆடு வழங்கப்படும். அரசு வழங்கும் ரூ.10 ஆயிரத்துக்கு ஏற்றார்போல, ஆடுகளும், குட்டிகளும் வழங்கப்படும். அரசு சார்பில் ஆடுகளை பராமரிக்க பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும். ஆடுகளை கொண்டு செல்வதற்காக போக்குவரத்து செலவுக்காக பயனாளிக்கு ரூ.150 வழங்கப்படும்.  ஆனால் இந்தாண்டு பயனாளிகளே ஆடுகளை வாங்கி வர வேண்டும். அந்த ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால், பயனாளிகள் அவர்களது வீட்டில் ஏற்கனவே வளர்த்து வரும் சொந்த ஆடுகள் மற்றும் வாடகைக்கு ஆடுகளை வியாபாரிகளிடம் இருந்து வாங்குவதுபோல காட்டிக் கொண்டனர். இந்த ஆடுகளுக்கு டேக் அடித்து பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆண்டிபட்டி ஒன்றியத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு  வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு முதற்கட்டமாக  ஒக்கரைப்பட்டி, கோவில்பட்டி, ரெங்கமுத்திரம் உள்ளிட்ட  பகுதிகளுக்கு அந்தந்த பகுதியில் வழங்கப்பட்டது.

இதில், சண்முகசுந்தரபுரம்  ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஆண்டிபட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனை  வளாகத்தில் 60 பயனாளிகளுக்கு தலா 4  வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. இதில், இம்மாதிரியான முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தமிழக அரசின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில், பயனாளிகள் வளர்த்து வரும் ஆடுகளுக்கும், வாடகைக்கு வாங்கி வந்த ஆடுகளுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. கால்நடை வளர்ப்பை அதிகரிக்கவே, விலையில்லா ஆடுகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், பயனாளிகள் ஏற்கனவே தாங்கள் வளர்க்கும் ஆட்டை காண்பித்தே பணம் வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து கால்நடைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தேனி மாவட்டத்தில் 2020-2021ம் ஆண்டில் 2,312 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை, அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் தேர்வு செய்கின்றனர். கொரோனா ஊரடங்கு மற்றும் தேர்தல் காலம் நெருங்குவதால் பயனாளிகளை ஆடுகளை வாங்கி வரச்சொல்லி, அவைகளுக்கான பணத்தை கொடுக்கிறோம். ஆடுகளுக்கு முறையாக டேக் அடிக்கப்படுகிறது. இதனால், ஆடுகளை சந்தையில் விற்க வாய்ப்பு இல்லை. பயனாளிகள் ஆடுகளை வாடைக்கு ஆடுகளை வாங்கி வந்து பணம் வாங்குகின்றனர் என்பது வதந்தி’ என்றார்.

Related Stories: