சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னை அருகே 30 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. வலுவிழந்த புயல் மெதுவாக நகர்வதால் சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்த டிட்வா புயல் மாலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ஆனால், நகரும் வேகம் குறைவாக இருந்தது. பின்னர் அது வடக்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 50 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு வட கிழக்கே 120 கிமீ தொலைவிலும், கடலூருக்கு வட கிழக்கே 130 கிமீ தொலைவிலும் நேற்று நிலை கொண்டது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதி, வட தமிழகம்- புதுச்சேரி கடற்கரைக்கான தூரம் 40 கி.மீ., ஆக இருந்தது.
இதன் காரணமாக, நேற்று காலை முதல் இரவு வரையில் சென்னை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்தது. குறிப்பாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் நேற்று காலை முதல் நேற்று இரவு வரையில் மழை பெய்து கொண்டே இருந்தது.
நேற்று பெய்த தொடர் மழை இன்றும் பெய்யும் என்பதால் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். அதனால், இன்று நடக்க இருந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள், சென்னைப் பல்கலைகழகம் அறிவித்து இருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன. இந்த தேர்வுகள் வேறு தேதிகளில் நடத்தப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளன.
நேற்று ஒருநாள் முழுவதும் பெய்த மழையால், சென்னையில் 150 மிமீ முதல் 170 மிமீ வரை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்துள்ளதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசியது.
இந்நிலையில், சென்னை அருகே நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவில் வட தமிழகம்- புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிக்கு இணையாக வட திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. பின்னர் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலை கொண்டது.
இந்த நகர்வின் காரணமாக இன்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
நாளை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதியின் ஊடாக பயணித்து மேலும் வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, படிப்படியாக தமிழகத்தில் மழை குறையும் என்றும், லேசான மழை 7ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்யும் வாய்ப்பும் உள்ளது.
மேலும், இன்று காலை முதல் மணிக்கு 60 கிமீ வேகத்தில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் காற்று வீசும். தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காலை முதல் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதனால் ஆழ்கடல் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
நேற்று முழுவதும் பெய்த மழை காரணமாக சென்னையில் 150 மிமீ மழை பதிவாகியுள்ளது. புழல் 119 மிமீ, வில்லிவாக்கம் 75 மிமீ, பள்ளிக்கரணை 66 மிமீ, தரமணி 50 மிமீ, காஞ்சிபுரம் 44 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் நேற்று மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. புயல் பாதிப்புக்காக நிவாரணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு முன்கூட்டியே செய்திருந்தது. மேலும், மீட்புப் படைகளும் தயார் நிலையில் இருந்ததால் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
சென்னையைப் பொறுத்தவரை மழை பெய்த நேரங்களில் மட்டுமே சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. மழை விட்ட சிறிது நேரங்களில் எல்லாம் வெள்ளம் வடிய தொடங்கிவிட்டது. சென்னையின் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்காத நிலைதான் உள்ளது. புறநகரில் மட்டும் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதாக புகார்கள் எழுந்தன. அங்கு அதிகாரிகள் விரைந்து சென்று தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேற்று காலையில் ஆலோசனை நடத்தி, தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டார். இதனால் சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் அதிகாரிகள் தயார்நிலையில் இருந்தனர். மழை வரும் என்பதால் ஏரிகளில் இருந்த நீர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டதால், பெரும் வெள்ளம் ஏற்படவோ, பாதிப்புகள் ஏற்படவோ வாய்ப்புகள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே தங்கியிருக்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
