புதுடெல்லி: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ரயில்வே வாரிய தலைவர் சதிஷ் குமாருக்கு அகில இந்திய ரயில்வே லோகோ பைலட்டுகள் சங்கத்தின் பொது செயலாளர் கே.சி.ஜேம்ஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், தினசரி பணிக்கு 8 மணி நேரவரம்பு, வாரந்தோறும் 46 மணி நேர விடுமுறை, வாரத்தில் நான்கு நாட்களுக்கு பதிலாக இரண்டு நாள் தொடர்ச்சியான இரவு பணிகள், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். நீண்டகாலமாக எழுப்பி வரும் இந்த கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறது.
லோகோ பைலட் ஊழியர்கள் ஒவ்வொரு நெருக்கடியிலும் ரயில்வே நிர்வாகத்திற்கு எப்போதும் துணை நின்று, நெருக்கடியான சூழ்நிலைகளிலும் நாட்டின் உயிர்நாடியை நகர்த்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளுக்கு மண்டல நிர்வாகம், ரயில்வே வாரியத்திடம் இருந்து நியாயமான முடிவை பெறும் நோக்கத்தில் இன்று காலை முதல் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. லோகோ பணியாளர்கள் தங்களுடைய பணிகளை பாதிக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
