தொண்டி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு

தொண்டி/திருவாடானை, ஜன.12: தொண்டி அருகே ஊருக்குள் வந்த புள்ளிமான் நாய்கள் கடித்து பரிதாபமாக உயிரிழந்தது. தொண்டி மற்றும் சுற்றுவட்டார வன பகுதிகளில் அதிகளவில் மான்கள் உள்ளன. இவை வழி மாறி அவ்வப்போது ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு வரும் மான்கள் பெரும்பாலும் நாய்கள் கடித்தும், அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியும் சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டும் இறக்கின்றன. இதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். நேற்று நகரிகாத்தான் கிராமத்தின் உள்ளே வந்த புள்ளி மானை நாய்கள் விரட்டி கடித்தன. பொதுமக்கள் மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்குள் மான் இறந்துவிட்டது. மான்கள் ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் திருவாடானை அருகே உள்ள குஞ்சங்குளம் கிராமத்தில் புள்ளிமான் ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதனை கண்ட கிராமமக்கள் விரட்டி சென்றனர். எனவே அந்த மான் ஒரு வீட்டுக்குள் புகுந்துவிட்டது. இதையடுத்து புள்ளி மானை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட மான் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. எனவே நாய்கள் கடித்திருக்கலாம் என தெரிகிறது.

Related Stories: