பொங்கல் சிறப்பு ரயில் திருமங்கலம் வழக்கம் போல் புறக்கணிப்பு வேதனையில் பயணிகள்

திருமங்கலம், ஜன.12:  பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் திருமங்கலத்தில் நிற்காமல் இயக்கப்படுவதால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். பொங்கல் திருநாளையொட்டி சென்னையிலிருந்து மதுரை வழியாக நாகர்கோவில், சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நேற்று முன்தினம் துவங்கியது. இதில் நாகர்கோவிலுக்கான சிறப்பு ரயில் சென்னையிலிருந்து 13 மற்றும் 14ம் தேதிகளிலும், மறுமார்க்கத்தில் இந்த ரயில் நாகர்கோயிலிருந்து ஜனவரி 16 மற்றும் 17ம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது. சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை விருதுநகர், கோவில்பட்டி நெல்லை வழியாக நாகர்கோவிலை செல்கிறது.

திருமங்கலத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை தாண்டினால் அடுத்து விருதுநகரில் தான் ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி பகுதி பொதுமக்களுக்கு வேதனையை அளித்துள்ளது. திருமங்கலம் பயணிகள் கூறுகையில்,  ‘‘மதுரை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரமாக திருமங்கலம் திகழ்கிறது. தென்மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து பஸ்களும் திருமங்கலத்தில் நின்று செல்கின்றன. ஆனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் திருமங்கலத்தை தொடர்ந்து புறக்கணிக்கின்றன. ஏற்கனவே முத்துநகர் மற்றும் அனந்தபுரி ரயில்கள் மட்டும் நின்று செல்லும் நிலையில் விழா காலத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் எதுவும் திருமங்கலத்தில் நிற்பதில்லை. அதே‘போல் தற்போது பொங்கலையொட்டி இயக்கப்படும் சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயிலும் திருமங்கலத்தை வழக்கம் போல் புறக்கணிக்கிறது. இந்நிலையை மாற்றி அனைத்து சிறப்பு ரயில்களும் திருமங்கலத்தில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

Related Stories: