நிலக்கோட்டை ஜம்புதுரை ஊராட்சியில் பணிகள் செய்ய விடாமல் தடுக்கும் துணை தலைவர் கலெக்டரிடம் புகார்

திண்டுக்கல், ஜன. 12: நிலக்கோட்டை ஜம்புதுரை ஊராட்சியில் பணிகளை செய்ய விடாமல் துணை தலைவர் தடுப்பதாக கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. நிலக்கோட்டை அருகே ஜம்புதுரை கோட்டை ஊராட்சி தலைவர் பவுன்தாய் (35). தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தார். அம்மனுவில், ‘ஜம்புதுரை கோட்டை ஊராட்சி துணை தலைவரான வேறு சமூகத்தை சேர்ந்த சிவராமன் என்பவர் பதவி வகிக்கிறார். இவர் தன்னை தானே ஊராட்சி தலைவர் என சொல்லி கொண்டு, ஊராட்சி அலுவலகத்தில் தலைவரின் நாற்காலிக்கு சற்று உயரமான நாற்காலி செய்து அதில்தான் அமர்கிறார். இவரை மீறி செய்யக்கூடிய பணிகளை தடுத்து நிறுத்தி தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். கடந்த 8ம் தேதி அலுவலகத்தில் வேலை செய்த போது, சிவராமன் அடியாட்களுடன் வந்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். மேலும் ஆடைகளை களைந்து அரை நிர்வாணமாக நின்று இழிவுபடுத்தினார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் இருதரப்பினரும் சமாதானம் செய்து கொள்ளுங்கள் எனக்கூறி திருப்பி அனுப்பி வைத்து விட்டனர்.

 இதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் தலித் தலைவர்க் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

Related Stories: