புதுச்சேரி, டிச. 1: புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி எலெக்ட்ரிக் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று காலை சென்று கொண்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலை மடுவுபேட் சந்திப்பில் பெட்ரோல் பங்க் அருகே காலை 7.50 மணியளவில் சென்றபோது, திடீரென இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் பயந்து போன டிரைவர், பஸ்சை உடனடியாக நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பதறியடித்து கீழே இறங்கினர். மேலும் இதுபற்றி கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் முன்னணி தீயணைப்பு வீரர் ஜெயகோபால் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். தகவலறிந்து லாஸ்பேட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே, தவறுதலாக ஏதோ ஒரு பட்டனை டிரைவர் அழுத்தியதால் தான் புகை வந்ததும், அது தானாகவே நின்று விட்டதும், தீ விபத்து ஏற்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து நிலையத்துக்கு திரும்பி வந்தனர்.
