ரூ.1.11 கோடி மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக 14 ஊராட்சிகளுக்கு புதிய வாகனங்கள்

ஊட்டி,ஜன.12: நீலகிரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்காக மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் பிக்அப் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் மாளிகையில் நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி ஆகியோர் முன்னிைல வகித்தனர். கலெக்டர் பங்கேற்று மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து தலா ரூ.7.94 லட்சம் மதிப்பில் மொத்தம் 1.11 கோடி மதிப்பில் 14 குப்பை சேகரிக்கும் பிக்அப் வாகனங்களை ஊராட்சி தலைவர்களிடம் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,நீலகிரியில் திடக்கழிவு மேலாண்மை என்பது ஒரு சவாலாகவே உள்ளது. நீலகிரியை தூய்மையாக வைப்பதற்காக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பதற்காக மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து 14 பிக்அப் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரிக்க பயன்படுத்துவதால் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க உதவியாக இருக்கும், என்றார்.  

நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சிகள் உள்ளது. ஊராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரிப்பதற்காக மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலகொலா, தொட்டபெட்டா, இத்தலார், கக்குச்சி, எப்பநாடு, உல்லத்தி ஆகிய 6 ஊராட்சிகளுக்கும், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடப்பள்ளி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனாடு, கொணவக்கரை, குஞ்சப்பனை, நெடுகுளா ஆகிய 4 ஊராட்சிகளுக்கும், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேரங்கோடு, மசினகுடி, நெலாக்கோட்டை ஆகிய ஊராட்சிகள் பிக்அப் வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ராஜன், மாவட்ட ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், ஜெய்சங்கர், நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>