மும்பை: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, வரும் 2026, ஜனவரி 9ம் தேதி நவி மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. ஐபிஎல்லை போன்று மகளிர் கலந்து கொள்ளும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) டி20 போட்டிகள் வரும் 2026 ஜனவரி 9ம் தேதி துவங்கி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெற உள்ளன.
மொத்தம் 22 போட்டிகள், நவி மும்பை, வதோதரா ஆகிய இரு நகரங்களில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், உபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு (ஆர்சிபி), குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் டபுள் ரவுண்ட் ராபின் முறையில் இரு முறை மோதும். முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
2 மற்றும் 3ம் இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதி இறுதிக்கு முன்னேறும். ஜனவரி 9ம் தேதி மாலை, நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த 2024ல் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. தொடரின் முதல் 11 போட்டிகள் நவி மும்பை, டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்திலும், மற்ற போட்டிகள் வதோதராவிலும் நடைபெற உள்ளன.
எலிமினேட்டர் போட்டி பிப். 3ம் தேதியும், இறுதிப் போட்டி பிப். 5ம் தேதியும் வதோதராவில் நடைபெறும். இதற்கு முன் நடந்த 3 டபிள்யுபிஎல் போட்டிகள் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடந்தன. முதல் முறையாக தற்போது இப்போட்டிகள் ஜனவரி -பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளன. இதுவரை நடந்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி இரு முறையும், ஆர்சிபி ஒரு முறையும் (2024) சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. இதுவரை நடந்த 3 டபிள்யுபிஎல் போட்டிகளிலும், டெல்லி அணி இறுதி வரை முன்னேறி உள்ளது.
