மும்பை: மும்பையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி ரயில் பாஸ் தயாரித்து பயணம் செய்த தம்பதியை ரயில்வே போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கல்யாண் பகுதியில் இருந்து தாதர் நோக்கிச் சென்ற ஏசி மின்சார ரயிலில் டிக்கெட் பரிசோதகர் விஷால் நவ்லே வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனியார் வங்கியில் விற்பனை மேலாளராகப் பணிபுரியும் குடியா சர்மா என்ற பெண் பயணியிடம் பாஸ் கேட்டபோது, அவர் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ செயலியைத் திறக்காமல் கூகுள் குரோம் இணையப்பக்கம் மூலம் ஒரு புகைப்படத்தைக் காட்டினார். அதில் இருந்த கியூஆர் கோடு வேலை செய்யாததால் சந்தேகமடைந்த அதிகாரி, உடனடியாக கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு அந்த பாஸில் இருந்த எண்ணை சோதித்தார்.
சோதனையில் அந்த பாஸ், ஓம்கார் சர்மா என்ற ஆணின் பெயரில் இருப்பதும், கடந்த பிப்ரவரி மாதமே காலாவதியாகி விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பெண்ணையும், அவருக்கு இந்த போலி பாஸை தயாரித்துக்கொடுத்த அவரது கணவர் ஓம்கார் சர்மாவையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பொறியாளரான ஓம்கார், ‘எனது கம்ப்யூட்டர் குறியீட்டுத் திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பழைய பாஸை திருத்தி, தேதி மற்றும் விபரங்களை மாற்றி புதியது போல உருவாக்கினோம்’ என்று ஒப்புக்கொண்டார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரயில்வே நிர்வாகத்தை ஏமாற்ற முயன்ற தம்பதி மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் அதிகாரப்பூர்வ செயலியில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
