விருதுநகரில் மெயின் குடிநீர் குழாய் உடைப்பு குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் தினசரி ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் வீண்

விருதுநகர், ஜன.11: விருதுநகர் நகராட்சிக்கான குடிநீர் ஆனைக்குட்டம் நீர் தேக்கத்திலிருந்து மெயின் குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. குடிநீர் குழாய் வரும் பழைய சிவகாசி சாலை முத்துராமலிங்கம் நகர் பகுதியில் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருவதால் உடைப்புகளை சரி செய்ய மக்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்தும், உடைப்புகளை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணத்தால் தினசரி ஒரு லட்சம் லிட்டர் குடிநீருக்கு மேல் வீணாகி வருகிறது. உடைப்புகளில் இருந்து வெளியேறும் குடிநீர் பாவாலி ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி குளம் போல் தேங்கி கிடக்கிறது. சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் குடியிருப்புவாசிகள் பகல், இரவு நேரங்களில் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசு உற்பத்தி அதிகரித்து, மக்களை பதம் பார்த்து வருகிறது. குடியிருப்புவாசிகள் மர்மகாய்ச்சல் கண்டு அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், ` அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் புகார் தெரிவித்தும் நகராட்சி குடிநீர் குழாய் உடைப்புகள் சரி செய்யப்படவில்லை. தினசரி லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. விஷஜந்துகள் வீடுகளுக்குள் நுழைந்து கடித்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சியில் மனு அளிக்கப்பட்ட நிலையில், ஆனைக்குட்டம் குடிநீர் பம்பிங்கை நிறுத்தி ஒருவாரத்திற்குள் உடைப்புகளை சரி செய்து தருவதாக நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்’ என்றனர்.

Related Stories: