ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள குளங்களில் அல்லிச் செடிகள் அகற்றப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடைகாலங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை சீசனுக்காக பூங்காவை தயார் செய்வது வழக்கம். இந்நிலையில் அடுத்த ஆண்டு வரும் கோடை சீசனுக்கு பூங்காவை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளும் தயார் செய்யப்பட்டு நாற்று நடவும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளது.
இதற்காக விதைப்பு பணிகளும், நாற்று உற்பத்தியும் தீவிரமாக நடந்து வருகிறது. இது தவிர பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகின்றன. தற்போது தாவரவியல் பூங்காவில் உள்ள குளங்களை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக பூங்கா நடுவில் உள்ள பெரிய குளத்தில் இருந்து அல்லி செடிகள் அகற்றப்பட்டு, குளத்தின் கரையோரங்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் பூங்கா நுழைவாயில் பகுதியில் உள்ள குளங்களும் சீரமைக்கும் பணி நடக்கிறது. குளங்களை சுற்றி இருந்த மலர் செடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு, அங்கு புதிய மலர் செடிகள் நடவு செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
