சென்னை: தமிழ்நாட்டை இழிவுடுத்துவதையே தன்னுடைய தொழிலாக கொண்டிருக்கிறார் ஆளுநர் ரவி என்றும், கமலாலயத்துக்கு அனுப்பப்படவேண்டியவர் ராஜ் பவனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் அவதூறு பரப்புவதற்கென்றே அனுப்பப்பட்டவர் ஆளுநர் ரவி. கமலாலயத்துக்கு அனுப்பப்பட வேண்டியவர் ராஜ் பவனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். நேற்று தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் ரவி ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசியிருக்கிறார். திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என பேட்டியில் கூறியிருக்கிறார். வடமாநிலத்திலிருந்து அதிகாரிகள் குழு வந்து இங்கிருக்கும் பீகாரிகளிடம் ஆய்வு நடத்திய போது கூட, ”பீகாரிகள் தாக்கப்படுவதாக வீடியோக்களில் வந்ததெல்லாம் வதந்தி, நாங்கள் இங்கே நன்றாக இருக்கிறோம். நாங்கள் நன்றாக நடத்தப்படுகிறோம், எங்களுக்கு நல்ல பொருளாதாரம் கிடைக்கிறது. அதன் மூலமாக எங்கள் குடும்பத்தையே நாங்கள் காப்பாற்றக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு இருக்கிறது”
என்று தெரிவித்தார்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களோடும் நல்ல உறவோடு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், பஞ்சாப் முதல்வர், மேற்குவங்க முதல்வர், கேரளா முதல்வர், தெலங்கானா முதல்வர் போன்ற பல மாநில முதல்வர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்திய மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாடு இந்தியாவோடு இணைந்து இருக்கிறது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
ஆளுநர் டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு நபர். ராஜ் பவனுக்கு ஆட்சி அதிகாரம் கிடையாது. ஆளுநர் மாநில அரசின் அமைச்சரவை முடிவுகளை ஒன்று ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்; நிறுத்தி வைக்கின்ற உரிமை அவருக்கு கிடையாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியை வைத்து மலிவான அரசியல் செய்ய வேண்டிய அவசியமே திமுகவுக்குக் கிடையாது. தமிழ்நாட்டின் கொள்கை இருமொழி கொள்கை தான்; இங்கே யாரும் இந்தி படிக்க விரும்பவில்லை; விரும்புகிறவர்கள் எங்கே வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம், தடை இல்லை.
தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் என்பது கிடையாது. அது ஆளுநரின் கற்பனை. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அதிவேகமாக நடைபெறுகிறது. இந்த அவசர கதியிலான வேலைப்பளுவால் மன உளைச்சலுக்கு ஆளாகி பல்வேறு மாநிலங்களில் பல பிஎல்ஓக்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். 30 நாட்கள் போதாது, போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய வாக்குரிமையை இழக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.
பொறுப்பு டிஜிபி என்பதை அறிமுகப்படுத்தியவர்களே அதிமுகவினர் தான். ராமானுஜம் மற்றும் ராஜேந்திரன் போன்றோர் அதிமுக ஆட்சியில் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டனர். நிரந்தர டிஜிபி நியமனத்திற்கான பட்டியல் வரும்போது, வேண்டப்படாத பெயர்கள் அனுப்பப்படுகின்ற பொழுது, அதில் சில மாற்றங்களைச் செய்து தாருங்கள் என்று கேட்கின்ற உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது. தேர்தல் ஆணையம் எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு ஆணையம், தேர்தல் காலத்திலே நிரந்தர டிஜிபி, தலைமைச் செயலாளர், அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோரை மாற்றுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு. தங்கள் மீது எத்தனை கல்லடி பட்டாலும், அந்தக் கல்லடிகளை எல்லாம் வெற்றிப்படிகளாக மாற்றக்கூடிய சக்தி திமுகவுக்கு உண்டு.
