* 4 நாட்களாக முடங்கிய விமான சேவை
* பிரச்னையை சரி செய்ய முடியாமல் தவிக்கும் ஒன்றிய பா.ஜ. அரசு
சென்னை: நாடு முழுவதும் 2650க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், விமான துறையை நவீனப்படுத்த ரூ.96,000 கோடிக்கும் அதிகமான மூலதன செலவு செய்தும் வீணாகியுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை உள்நாடு மற்றும் சர்வதேசம் என மொத்தம் 159 விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் 34 சர்வதேச விமான நிலையங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தே வருகிறது.
அதற்கு தகுந்தவாறு விமான போக்குவரத்து துறையில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை. உலககெங்கும் டிஜிட்டல் விமான நிலையங்களாக மாறி வருகிறது. ஆனால் ஒன்றிய பாஜ அரசின் விமான போக்குவரத்து துறையோ தொழில் நுட்பங்களை நவீனபடுத்துவதில் கோட்டை விட்டு வருகிறது என்பது அடிக்கடி நடக்கும் தொழில் நுட்ப கோளாறுகளே சாட்சிகளாக உள்ளன. விமான நிலையங்களை மேம்படுத்தவும், விமான சேவைகளை நவீனப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை ஒன்றிய பாஜ அரசு கொண்டு வருவதாக அறிவித்தது.
இதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் பொது- தனியார் கூட்டாண்மை மூலம் விமான நிலையங்களை நவீனமயமாக்க கடந்த 2019-20 முதல் 2024-25 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.96,000 கோடிக்கும் அதிகமான மூலதன செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. மேலும் DigiYatra போன்ற டிஜிட்டல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அறிவித்த திட்டங்கள் மூலம் விமான போக்குவரத்து துறையில் கட்டமைப்புகளை மேம்படுத்தி இருந்தால் விமான சேவைகளில் அவ்வளவு சீக்கிரத்தில் பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்புகள் வராது.
ஆனால் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விமான பணி நேர கட்டுப்பாடு விதிகளால் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக கடந்த 4 நாட்களாக இந்தியா முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. கடந்த 4 நாட்களாக விமான சேவைகள் அனைத்தும் நாடு முழுவதும் முடங்கியுள்ளன. கடந்த 4 நாட்களாக 2650 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் பரிதவித்து வருகின்றனர். உடனடியாக அவர்களால் ரயில் போக்குவரத்திலும் வர முடியவில்லை. அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
பயண நேரமும் அதிகரிக்கும். இதற்கு ஒன்றிய விமான போக்குவரத் துறை என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்பதே பாதிக்கப்பட்ட பயணிகளின் கேள்வியாக உள்ளது. இந்த சூழ்நிலையில், சென்னை விமானநிலையத்திலும் நேற்று 4வது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகி, பலமணி நேரம் தாமதத்துடன், ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. பணியாளர் பற்றாக்குறை, தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை உள்ளிட்டவை இண்டிகோவின் விமான சேவை குறைபாடுக்கு காரணமாக கூறப்பட்டாலும் முக்கிய காரணம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிமுகப்படுத்திய விமான கடமை நேர வரம்பு விதிமுறை தான்.
விமானிகளுக்குத் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள கடுமையான விமானப் பணிநேரம் மற்றும் ஓய்வு விதிகள் பின்பற்றுவதற்கு ஏற்ற போதிய எண்ணிக்கையில் விமானிகள் இண்டிகோவிடம் இல்லை. இதனால் இண்டிகோ விமானச் சேவை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது இதனால் இப் புதிய விதி வாபஸ் பெறப்பட்டது. என்றாலும் விமானங்கள் தாமதம், ரத்து நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் நேற்று அதிகாலை 1 மணி முதல் காலை 8 மணிவரை இண்டிகோ ஏர்லைன்சின் 62 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களை இயக்குவதற்கு போதிய விமானிகள், பணியாளர்கள் இல்லாததால் ரத்து, நீண்ட காலதாமத புறப்பாடு, தொழில்நுட்ப கோளாறு பல்வேறு காரணங்களை கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
எனினும், விமானநிலைய இணையதளத்தில் விமானங்கள் ரத்து, தாமதம் என்பதை தெளிவாக போடுங்கள் என்று பயணிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பணியில் உள்ள அதிகாரிகள் பயணிகளின் உணர்வுகளை மதிக்காமல் பயணிகள் கேட்கும் கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்காமல் இருப்பதாக பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
* தனியாருக்கு தாரை வார்க்கப்படும் 25 ஏர்போர்ட்கள்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்கான நிதி திரட்டும் வகையில், அரசுக்குப் பெரிய அளவில் லாபம் அளிக்காத மற்றும் பெரிய அளவில் பயன்படுத்த முடியாத சொத்துக்களைத் தேசிய பணமாக்கல் திட்டத்தின் வாயிலாகத் தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக இந்தியாவில் இருக்கும் 25 விமான நிலையங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தனியார்மயமாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புவனேஷ்வர், வாரணாசி, அமிர்தசரஸ், திருச்சி, இந்தூர், ராய்ப்பூர், கோழிக்கோடு, கோயம்புத்தூர், நாக்பூர், பாட்னா, மதுரை, சூரத், ராஞ்சி, ஜோத்பூர், சென்னை, விஜயவாடா, வதோதரா, போபால், திருப்பதி, ஹூப்ளி, இம்பால், அகர்தலா, உதய்பூர், டேராடூன் மற்றும் ராஜமுந்திரி ஆகிய விமான நிலையம் தனியார்மயமாக்கப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
