* சென்னை – திருச்சிக்கு ரூ.41 ஆயிரம்
* சென்னை-கோவைக்கு ரூ.60 ஆயிரம்
* சென்னை-பெங்களூரு ரூ.17 ஆயிரம்
* சென்னை- கொச்சி ரூ.27 ஆயிரம்
சென்னை: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை முடங்கியதால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. வரலாறு காணாத அளவு, விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் நாடு முழுவதும் உள்ள விமான பயணிகள் மிகப்பெரிய அளவில் தவிப்புக்கு உள்ளாகினர். இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களின் விமானங்கள் நாடு முழுவதும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன. அதுபோல் சென்னை விமான நிலையத்திலும் நேற்று நான்காவது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் முற்றிலும் முடங்கி உள்ளன.
ஆனால், ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்கள் ஒரு சில விமானங்களை இயக்கி வருகின்றன. அந்த விமானங்களில் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னை-திருச்சி இடையே நேற்று நேரடி விமானம் இல்லை என்று கூறி, மும்பை, பெங்களூரு வழியாக 36 மணி நேரம் பயணம் செய்து, திருச்சி செல்வதற்கு ரூ.40,800 கட்டணம்.
சென்னை- கொச்சி ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.27 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. சென்னை -டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் நேற்றைய கட்டணம் ரூ.36 ஆயிரம், சென்னை -பெங்களூரு ஏர் இந்தியா விமானத்தில் ரூ.17 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய நகர்களுக்கு நேற்று விமானங்கள் இல்லை.சென்னையில் இருந்து நேற்று மதுரை, தூத்துக்குடி, சேலம், ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விமான சேவைகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதேபோன்று பெரும் அளவு பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள விமான பயணிகள் வரலாறு காணாத அளவில் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர்.
