கொடைக்கானல்-பழநி மலைச்சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு: பல இடங்களில் பாறை சரிவு: சீரமைக்கும் பணி தீவிரம்

கொடைக்கானல்: கொடைக்கானல்-பழநி மலைச்சாலையில் இன்று அதிகாலை ராட்சத மரம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல, மலைச்சாலையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், பாறைகள் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 3 தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் மாலை வரை மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தும், மண் சரிந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்-பழநி பிரதான மலைச்சாலையில் மேல்பள்ளம் அருகே ராட்சத மரம் ஒன்று இன்று அதிகாலை திடீரென சாய்ந்து விழுந்தது. இதனால், அந்த வழியில் இருந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. அந்த சமயத்தில் வாகனங்கள் செல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் வடகவுஞ்சி, மேல்பள்ளம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மன்னவனூர் சாலையிலும் மரம் சாய்ந்தது;இதேபோல, கொடைக்கானல்-மன்னவனூர் மலைச்சாலையில் கூக்கால் பிரிவு அருகே நேற்றிரவு ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், மரம் வெட்டி அகற்றப்பட்டது. கொடைக்கானல்-பள்ளங்கி மலைச்சாலையில் அட்டுவம்பட்டி பல்கலைக்கழகம் அருகே நேற்றிரவு மரம் சாய்ந்து விழுந்ததில் அருகே இருந்த மின்கம்பம் சேதம் அடைந்தது. இதனால் பள்ளங்கி அட்டுவம்பட்டி, வாழை காட்டு ஓடை உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. பாறைகள் சரிவு;கொடைக்கானல்-வில்பட்டி சாலையில் பள்ளங்கி பிரிவு அருகே ஏற்கெனவே மண் சரிவு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. இதே பகுதியில் இன்று அதிகாலை பாறைக்கற்கள் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் பாறைகள் விழுந்துள்ளதால் அப்பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: