சென்னை: சென்னை பெரியமேடு ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கடந்த 5ம் ேததி முதல் 9ம் தேதி வரை 2025ம் ஆண்டுக்கான 23வது ஆசியா மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களின் காவல்துறை அணிகள் கலந்து கொண்டன. தமிழ்நாடு காவல்துறை சார்பில் காவல் அதிகாரிகள் உள்பட 68 பேர் தடகள போட்டியில் கலந்துகொண்டனர். பல்வேறு போட்டிகளில் 14 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 33 பதக்கங்களை தமிழக காவல்துறை அணி பெற்று தமிழ்நாட்டிற்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது.
அதைதொடர்ந்து பதக்கம் பெற்ற காவல்துறை அதிகாரிகளை நேற்று தமிழ்நாடு காவல்துறை டிஜிபி வெங்கடராமன் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது வெற்றி பெற்ற காவலர்கள் தங்களது பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை டிஜிபியிடம் காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் காவல்துறையின் ஆயுதப்படை ஐஜி விஜயகுமாரி உடனிருந்தார்.
