முரசொலி மாறனின் 22ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 22ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலைஞரின் மனசாட்சியாக விளங்கியவரும், திமுகவின் முன்னோடிகளில் ஒருவருமான முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 22ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, நாகை மாவட்டம், திருக்குவளையில் கலைஞர் இல்லத்தில் உள்ள முரசொலிமாறன் சிலைக்கு நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக கலைஞர் சிலை, கலைஞரின் தந்தை முத்துவேலர் தாயார் அஞ்சுகம் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அங்குள்ள கலைஞர் மற்றும் அனைவரது உருவ படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செயலாளர் செந்தில்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் சரவணன், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்சி தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் திமுகவினர், முரசொலி மாறன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் உருவப்படத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுகவினர், முரசொலிமாறன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த முரசொலிமாறனின் உருவப்படத்திற்கு அமைச்சர் கோவி.செழியன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்‌. விஜயன், துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கும்பகோணம் மாநகர திமுக அலுவலகத்தில் அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், துணை மேயர் தமிழழகன் மற்றும் திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஈரோட்டில் தனது முகாம் அலுவலகத்தில் அமைச்சர் சு.முத்துசாமி, எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், துணை மேயர் செல்வராஜ் மற்றும் திமுகவினர், முரசொலி மாறன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். காங்கயத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் முரசொலிமாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முரசொலி மாறனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சேலம் மத்திய மாவட்டம் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பூலாவரியில் உள்ள திமுக அலுவலகத்தில் அமைச்சர் ராஜேந்திரன், எம்பி எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் திமுகவினர் அலங்கரிக்கப்பட்ட முரசொலி மாறன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் படத்துக்கு அமைச்சர் ஆர்.காந்தி, எம்எல்ஏ ஈஸ்வரப்பன் மாலை அணிவித்து மலர் தூவி மவுன மரியாதை செலுத்தினர்.  திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறன் உருவப்படத்துக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் உருவப்படத்திற்கு மேயர் மகேஷ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி மாநில திமுக சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் முரசொலி மாறனின் படத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா, ஜெகத்ரட்சகன் எம்பி மற்றும் திமுகவினர் மரியாதை செலுத்தினர். இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் முரசொலி மாறனின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

* முரசொலி மாறன் வழிநின்று மாநில உரிமைகளை காக்க உறுதிகொள்வோம்: கனிமொழி எம்பி
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: திமுகவின் முன்னோடி சிந்தனையாளராக டெல்லியில் ஒலித்தவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர், மாநில சுயாட்சிப் போராளி, அனைத்திற்கும் மேலாக கலைஞரின் மனசாட்சியாக திகழ்ந்த முரசொலி மாறனின் நினைவுநாள் இன்று (நேற்று). அவரது அளப்பரியப் பணிகளை நினைவுகூர்ந்து, அவரது வழிநின்று மாநில உரிமைகளைக் காக்க உறுதிகொள்வோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: