அடுத்த 2 பட்ஜெட்டையும் நானே தாக்கல் செய்வேன்: முதல்வர் சித்தராமையா உறுதி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தலைமை மாற்றம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் இடையே பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, ‘கட்சி மேலிடம் இதுதொடர்பாக ஏதேனும் பேசியிருக்கிறதா? நம்மால் எதுவும் செய்ய முடியாது. முன்பும் கூட சிலர் இதுகுறித்தெல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது டெல்லி சென்றிருக்கிறார்கள். கடைசியாக நானும் சிவகுமாரும் கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்போம். அடுத்த 2 பட்ஜெட்டையும் நானே தாக்கல் செய்வேன். பெங்களூரு வரும் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசுவேன்’ என்றார். இந்நிலையில் கர்நாடக மாநில பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘முதல்வர் மாற்றம், அமைச்சரவை மாற்றம் குறித்து பொதுவெளியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விவாதிப்பதை ஏற்க முடியாது. தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி பாஜ விமர்சனம் செய்ய வாய்ப்பை ஏற்படுத்தி தருபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கிறேன்’ என்றார்.

* டி.கே.சிவகுமார் வாழ்த்து
இது குறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசுகையில், 5 ஆண்டுகளும் முதல்வராக நீடிப்பதாக சித்தராமையா கூறியிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். நாங்கள் அனைவரும் அவருடன் இணைந்து பணியாற்றுவோம். சித்தராமையா அவரது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதைப்பற்றி நான் பேசமுடியாது. கட்சி மேலிடம் என்ன சொன்னாலும் நான் கேட்பேன். அனைவரும் கட்சி மேலிட உத்தரவுப்படி செயல்படுவோம் என்று கூறினார்.

Related Stories: