நெல்லை டவுனில் இன்று அதிகாலை நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான நெல்ைல டவுன் நெல்லையப்பர் கோயிலில் கடந்த 4ம் தேதி ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவை தொடர்ந்து அம்மனுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடும், பல்வேறு வாகனங்களில் காந்திமதி அம்மன் ரதவீதி உலாவும் நடந்தது. இதைத்தொடர்ந்து 11ம் நாளான நேற்று காலை அம்மன் தங்க பல்லக்கில் எழுந்தருளியதும் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

இதைத்தொடர்ந்து காந்திமதி அம்பாள் தபசு கோலத்தில் தங்க சப்பரத்தில் அதிகாலை ஒரு மணிக்கு எழுந்தருளினார். மேலும் தெற்கு ரதவீதி, பேட்டை ரோடு வழியாக காட்சி மண்டபத்துக்கு அதிகாலையில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து நேற்று (14ம் தேதி) நண்பகல் 12 மணி அளவில் டவுன் காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவமும், பின்னர் சுவாமி, அம்பாள் ரதவீதி வலமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 12ம் நாளான இன்று (15ம் தேதி) அதிகாலை அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் பட்டின பிரவேசம் வீதியுலா நடந்தது. இதையடுத்து மூன்று நாட்கள் ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 18ம் தேதி சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினபிரவேசம் வீதி உலாவுடன் ஐப்பசி திருக்கல்யாண விழா நிறைவடைகிறது.

Related Stories: