காங். போராட்டம் அறிவிப்பு எதிரொலி கவர்னர் மாளிகை பாதுகாப்புக்கு துணை ராணுவம் விரைவு புதுவையில் பரபரப்பு

புதுச்சேரி, ஜன. 6:புதுச்சேரியில் கவர்னருக்கு எதிராக காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் 8ம் தேதி போராட்டம் அறிவித்துள்ள நிலையில், கவர்னர் மாளிகை பாதுகாப்புக்கு துணை ராணுவம் கோரப்பட்டுள்ளது. 5 கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று புதுச்சேரி வருகின்றனர்.

ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, ராஜ்நிவாசை முற்றுகையிட போவதாக ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இதற்கான பிரசாரத்தையும் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இதற்கிடையே புதுச்சேரியில் 144 தடை உத்தரவை கலெக்டர் பூர்வா கார்க் அதிரடியாக பிறப்பித்தார். இதன் மூலம் கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம், தலைமை செயலகம், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனையில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் போராட்டம் மறியல் உள்ளிட்டவை நடத்தவும், 5 நபருக்கு மேல் கூடவும் தடை போடப்பட்டுள்ளது.

இதனிடையே ஆளுங்கட்சி போராட்டத்தில் ஈடுபடும்போது உள்ளூர் போலீசாரால் அமைச்சர், எம்எல்ஏக்கள் ஆதரவாளர்களை கட்டுப்படுத்துவது சிரமம் என்பதால் கவர்னர் மாளிகை பாதுகாப்பு பணிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை (துணை ராணுவம்) வீரர்களை அனுப்ப புதுச்சேரி காவல்துறை சார்பில் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் கவர்னர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தின்போது நெய்வேலியில் இருந்து துணை ராணுவத்தினர் வந்து கவர்னர் மாளிகை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் போராட்டத்தை முன்கூட்டியே தடுக்கும் வகையில் மத்திய படை குவிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக

கருதப்படுகிறது.

5 கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று அல்லது நாளை புதுச்சேரி வருகின்றனர். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் எல்லைக்குள் இருக்கும் ஆளும்கட்சி எம்எல்ஏக்கள், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள், வீடுகள் தொடர் கண்காணிப்பு,  தேவைப்பட்டால் முன்கூட்டியே கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர். தடையை மீறி வரும் 8ம் தேதி போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், அமித்ஷா சென்னை வருகையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 8ம் தேதிக்கு பிறகு புதுச்சேரியில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் நிகழலாம் என தெரியவந்துள்ளது.இதற்கிடையே அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாம் விழாவுக்கு பிறகு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். மேலும் அமைச்சர் நமச்சிவாயம் ஆளும் கட்சியின் போராட்டத்தை புறக்கணித்து வருவதால், இந்த வாரம் புதுச்சேரி அரசியல் நிலவரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தெரிகிறது.

Related Stories:

>