நுகர்பொருள் வாணிப கழகங்களில் சுமை தூக்குவோருக்கு சம்பள பிரச்னை ரேசன் பொருட்கள் தேக்கம்

சிவகங்கை, ஜன.4: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகங்களில் சுமை தூக்குவோருக்கு வழங்கப்படும் கூலி பிரச்னையால் ரேசன் பொருட்கள் கடைகளுக்கு அனுப்பப்படாமல் தேக்கமடைந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் இயங்கும் 625 ரேசன் கடைகள் உட்பட மொத்தம் 802 ரேசன் கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்ல தனியார் லாரிகள், பாம்கோ(நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை) சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் லாரி மூலம் கொண்டு வரப்பட்டு பின்னர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளுக்கும் கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு ரேசன் பொருட்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்க மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களுக்கு வரும் லாரிகளில் இருந்து பெருட்களை இறக்கவும், பின்னர் கடைகளுக்கு ஏற்றவும் சுமை தூக்குவோர்கள் உள்ளனர். இந்த லாரிகளில் வரையறை செய்யப்பட்ட கொள்ளளவு(9 டன்) மட்டுமே பொருட்கள் ஏற்ற வேண்டும்.

ஆனால் கூடுதலாக (15டன் முதல் 20டன் வரை) ஏற்றப்படுகிறது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏற்றப்படும் மூட்டைகளுக்கு லாரி ஒப்பந்த தாரர்களே ஏற்று மற்றும் இறக்கு கூலி வழங்கி வருகின்றனர். இவ்வாறு 2016ம் ஆண்டு முதல் டன் ஒன்றிர்க்கு ரூ.17.50 வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தக்கூலி கடந்த நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை எனக்கூறியும், அவ்வாறு உயர்த்தப்படாத கூலியை நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து தற்போது வழங்க வேண்டும் எனக்கூறி சுமை தூக்குவோர் கடந்த 2நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படாமல் பொருட்கள் குடோன்களிலேயே தேக்கமடைந்துள்ளன. லாரி ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: வரையறை செய்யப்பட்ட அளவிற்கு மேல் உள்ள மூட்டைகளை ஏற்ற சுமை தூக்குவோருக்கு நாங்கள் தான் கூலி வழங்கி வருகிறோம். லாரிகளில் பொருட்கள் மூட்டை கொண்டு செல்ல எங்களுக்கு குறைந்த கட்டணமே வழங்கப்படுகிறது. அதனால் சுமை தூக்குவோருக்கு எங்களால் கூடுதல் கூலி வழங்க இயலவில்லை. லாரிகளில் கூடுதலாக மூட்டைகள் ஏற்ற வேண்டாம். வரையறை செய்யப்பட்ட அளவு மட்டுமே ஏற்றட்டும் என்றனர்.

Related Stories: