கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 27 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த குடும்பத்தினர் வங்கி கணக்கில், தலா ரூ.20 லட்சம் தவெக சார்பில் கடந்த 18ம்தேதி வரவு வைக்கப்பட்டது. அந்த வகையில் கரூர் கோடங்கிபட்டியை சேர்ந்த ரமேஷின் (32) குடும்பத்திற்கு விஜய் ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார்.
உயிரிழந்த குடும்பத்தினரிம் விஜய் வீடியோ காலில் பேசும் பொழுது நேரில் உங்களை சந்திப்பேன் என்று கூறியிருந்த நிலையில் நேற்று சென்னை மாமல்லபுரம் தனியார் சொகுசு விடுதியில் பாதிக்கப்பட்ட 37 பேரின் குடும்பத்தினரை சந்தித்தார். இதில் கோடங்கிபட்டியை சேர்ந்த ரமேஷின் குடும்பத்தின் சார்பில் அவரது மனைவி சங்கவி செல்லவில்லை. அவரது தங்கை பூபதி, இவரது கணவர் அர்ஜுனன், உறவினர் பாலு ஆகியோர் சென்றனர்.
இந்நிலையில் ரமேஷ் மனைவி சங்கவிக்கு தெரியாமல் இவர்கள் சென்ற காரணத்தினாலும், விஜய் நேரில் வந்து ஆறுதல் கூறாத காரணத்தினாலும் தனது வங்கி கணக்கில் செலுத்திய ரூ.20 லட்சத்தை சங்கவி திருப்பி அனுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விஜய்யை சந்திக்க மாமல்லபுரம் சென்ற உறவினர்களிடம் விசாரித்த போது, சங்கவி அழைக்கப்பட்டாரா? இல்லையா? என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு அழைப்பு வந்தது நாங்கள் விஜயை சந்திக்க சென்றோம். எங்களை கட்டிப்பிடித்து அழுதார் என்று கூறினர்.
