சில்லி பாய்ன்ட்…

* ரஞ்சி கோப்பை போட்டியில் பிருத்விஷா இரட்டைச்சதம்
சண்டிகர்: ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டியில் சண்டிகர் அணிக்கு எதிராக, மகாராஷ்டிரா அணியின் 2வது இன்னிங்சில் ஆடிய பிருத்வி ஷா, 3ம் நாளான நேற்று, 141 பந்துகளில் 200 ரன் குவித்து அதிரடி சாதனை படைத்தார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் இது, 2வது அதிவேக இரட்டைச் சதம். 156 பந்துகளில் 5 சிக்சர், 29 பவுண்டரிகளுடன் 222 ரன் எடுத்தபோது அவர் ஆட்டமிழந்தார். பிருத்விஷா முதல் இன்னிங்சில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. தவிர, கடந்த 20 மாதங்களில் அவர் விளாசிய முதல் சதமும் இதுவே.

* இந்தியாவுடன் டி20 ஆஸியில் ஜம்பா விலகல்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வரும் 29ம் தேதி (நாளை) முதல் 5 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆடம் ஜம்பா, முதல் போட்டியில் ஆடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடமாட்டார் என்றும், அவருக்கு பதில், தன்வீர் சங்கா ஆஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஜம்பாவுக்கு 2வது குழந்தை பிறக்க உள்ளதால் அவர் ஆடவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

* சிந்து காலில் காயம் ஆட முடியாமல் சோகம்
புதுடெல்லி: பேட்மின்டன் போட்டிகளில் இந்தியாவுக்காக இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, இந்தாண்டில் மீதமுள்ள நாட்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என கூறியுள்ளார். காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற உள்ளதாகவும் முழு குணம் அடைந்தபின்பே அடுத்து வரும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனது காலில் ஏற்பட்டுள்ள காயம் தொடர்பாக எலும்பியல் நிபுணர் டாக்டர் தின்ஷா பர்திவாலா அளித்துள்ள அறிவுரையின்படி இந்தாண்டில் நடக்கும் போட்டிகளை தவிர்க்க முடிவு செய்துள்ளேன்’ என்றார்.

Related Stories: