*4 பேர் கைது
போடி : போடி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் எஸ்.ஐ கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் ஆகியோர்கள் போடி தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை காளியம்மன் கோயில் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 4 பேர் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்த போது, அவர்கள் வைத்திருந்த பைகளில் 24 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இனையடுத்து விசாரித்ததில், அவர்கள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த உக்கிர பாண்டி (51), இவரது மனைவி இந்திராணி (50), தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி (23), அவரது நண்பர் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெளிமாநிலங்களில் கஞ்சாவை கொள்முதல் செய்து தேனி மாவட்ட பகுதி பல்வேறு இடங்களில் ரகசியமாக இருக்கும் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதும், அப்படியே கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கடத்திச் சென்று அங்குள்ள சிறு சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘இவர்கள் கம்பம் வழியாக கம்பம் மெட்டு, குமுளி போன்ற பகுதிகளில் கடத்திச் செல்வது வழக்கம்.
கம்பம் நகரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா கடத்தி விற்பவர்களை ஒடுக்கியதால் அப்பகுதியில் அவர்கள் செல்வதை நிறுத்தி விட்டனர். தற்போது இதே கும்பல் போடி நகரில் விற்பனை செய்து,போடி மெட்டு வழியாக கேரள மாநிலம் செல்வதற்கு முயற்சி செய்துள்ளனர்’’ என்றனர். இதனையடுத்து 4 பேரும் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
