புதுச்சேரி பல்கலை. மாணவிகள் பாலியல் புகார் 3 பேராசிரியர்கள் அதிரடி சஸ்பெண்ட்: காரைக்கால் பேராசிரியர் அந்தமானுக்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் காரைக்கால் கிளையில், பேராசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி கடந்த 9ம் தேதி பல்கலைக்கழக மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாணவர்களின் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் 6 மாணவிகள் உள்பட 24 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், போராட்டக்குழுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ்பாபு உள்ளிட்ட பேராசிரியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், மாணவ பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், எந்தெந்த போராசிரியர்கள் மீது பாலியல் புகார் தரப்பட்டுள்ளதோ, அவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும், மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி பல்கலை. மாணவர்களின் புகாரை தொடர்ந்து, ஆந்திராவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் விஜய் ஆனந்த், சண்டிகரைச் சேர்ந்த புவியியல் துறை பேராசிரியர் சைலேந்திர சிங், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் கல்வி பேராசிரியர் சின்சூன் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பல்கலை. நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் காரைக்கால் பேராசிரியர் மாதையா அந்தமான் நிகோபாருக்கு மாற்றப்பட்டார். இதுதவிர புதுச்சேரி பல்கலைக்கழக உடற்கல்வி பேராசிரியர் பிரவீன் மீதான புகாரை குழு விசாரித்து வருவதால் விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக புதுச்சேரி பல்கலைக்கழக துணை பதிவாளர் மகேஷ் கூறுகையில், ‘3 பேராசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பேராசிரியர் அந்தமான் நிக்கோபார் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளார். குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவரும் நீக்கப்படுவார். யாரையும் பாதுகாக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை,’ என்றார்.

Related Stories: